பெங்களூரில் இருந்து சலித்து கொண்டு தயாரான பயணம். பயணத்தின் ஏற்பாடு வேலைகளும், உடல் நல குறைவுக்காக உட்கொள்ளும் கஷாயமும், இடமாற்றமும் இந்த பயணத்தை நிறுத்த எத்தனித்தது. அதை முறியடித்து கிளம்பினோம். இதெல்லாம் பயண நாளின் முன்பு வரைதான். பொழுது விடிந்த உடன் அணைத்து தயக்கங்களும் பறந்து போகும்.
அதிகாலையில் பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் ஏறினோம். நான்கு மணி நேரத்தில் சக்லேஷ்பூர் வந்தடைந்தோம். சக்லேஷ்பூர் மலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. அங்கிருந்து நாங்கள் தங்கவேண்டிய இடத்திற்கு பஸ் பிடித்து மலையில் ஏறினோம். ஒவ்வொரு மலை கிராமமாக நின்று சென்றது. பாதி தூரம் வந்திறங்கிய எங்களை நாங்கள் புக் செய்திருந்த ஹோம் ஸ்டே உரிமையாளர் வந்து அழைத்துச் சென்றார்.
அவரது வீடு மலைகளுக்கு நடுவில் பூக்கள் சூழ அமைந்துள்ளது. அங்கு சென்ற உடன் அவரது மனைவி மலைநாடு பாணியில் செய்த உணவை பரிமாறினார். பசியில் அமிர்தம் போல் இருந்தது. அவர்களது கவனிப்பு அதற்கும் மேல். நாங்கள் தங்கி இருந்த மூன்று நாட்களுமே அதே கவனிப்பு, அமிர்தமான உணவு, மிகச்சரியான ஏற்பாடுகள் என உதவியாய் இருந்தனர். இந்த இடத்தை அவர்கள் இருவருமே கவனித்து கொள்கின்றனர். இதெல்லாம் பணத்திற்காக மட்டும் ஒருவர் நீண்ட நாட்கள் செய்ய முடியாது என்று தோன்றியது. அவரிடம் இதெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் விவசாயத்திற்கு இது பரவாயில்லை என்றார். உண்மையாய் இருந்தும், அவர்களுக்கு வேலையில் இருந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும், நாம் இப்படி இருக்கிறோமோ என்ற கேள்வியை எழுப்பியது.
பயணங்கள் அனைத்திலும் இடங்களோடு சேர்த்து மனிதர்களும் நம்மை மாற்றி செல்கிறார்கள். மனிதர்களின் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகம் தான் ஆகிறது.
சக்லேஷ்பூர் சுற்றியுள்ள மலைகளில் பலா மரங்களும், காபி தோட்டங்களும், மிளகு ஏலக்காய் செடிகளும் பரவலாக காணப்பட்டன. பலா மரங்கள் இங்கு இயற்கையாய் விளைகின்றன. அடர்ந்த காட்டு பகுதியில் கூட பலா காய்த்து தொங்குகிறது. இங்கிருந்து செல்லும் ரயில் பாதை பிரபலம். மேற்கு தொடர்ச்சி மலையில் 60 கிமீ ஊடுருவி செல்கிறது. 46 சுரங்க பாதைகள் வழியாக மங்களூர் செல்கிறது. அதில் ஒரு பாதையை பார்க்க அதிகாலை ஜீப்பில் சென்றோம். முன்னூறு அடிக்கும் மேல் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாதை. அடர்ந்த காட்டிற்கு நடுவில் பிரமாண்டமாய் நிற்கிறது, கீழே ஓடை. ரயில்வே பாதையில் நடந்து சென்றோம். முதலில் பயமாய் இருந்த போதும் சிறிது நேரத்தில் காட்டின் அழகு நம்மை நிதானமாக்குகிறது. ஒரு புத்தகம் அடுத்த புத்தகம் என்ன என்பதை காட்டிவிடும். அது போலத்தான் பயணமும். ரயிலில் மழையில் மங்களூர் என்று.

அங்கிருந்து ஹோசஹள்ளி பெட்டா என்ற மலை உச்சிக்கு சென்றோம். கடைசி இரண்டு கிமீ மண் பாதை, அதுவும் மழை நீர் அரித்து பிளந்து கிடந்தது. சில இடங்களில் செங்குத்தாக ஏறியது. ஜீப்பின் ஓட்டுநர் துல்லியமாக பாதையை கணித்து ஓட்டி சென்றார். வண்டியில் அனைவரும் அலறிக்கொண்டு சென்றோம். மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்தூண் நடப்பட்டு இருந்தது. அந்த கிராமத்தின் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது. அங்கிருந்து மேற்கு தொடர்ச்சி மலை அலை போல தெரிந்தது. புல்வெளியாக இருந்த அந்த உச்சியில் சிறு பூக்களும் பட்டாம் பூச்சிகளும் உயிர் கொடுத்தன. 3 கிமீ உயரத்தில் மலைகளுக்கு நடுவில் மண்ணோடு மண்ணாக இருக்கும் இந்த புல்வெளியில் சிறிய மஞ்சள் பூக்கள் இந்த பிரபஞ்சத்தின் உயிர் என மெய் சிலிர்க்க வைத்தது. ஆம் என்பது போல் ஒரு பட்டாம் பூச்சி கையில் ஏறி சிறிது தூரம் வந்தது.அதன் கொம்புகள் பறக்க அமர்ந்து வந்தது. புல்லில் கையை வைத்த உடன் மறந்து சென்றது.

மூக்க மனே அருவிக்கு சென்றோம். கற்குவியல்களின் மேல் ஏறிச்செல்ல வேண்டும். கடைசி தூரம் சரிவாக இருந்ததால் அருவியை கீழிருந்து பார்க்க முடியவில்லை. அது விழும் இடத்தில் இருந்து பார்த்தோம். கஷ்டப்பட்டு ஏறி வந்து மிச்ச தூரத்தையும் இறங்க வேண்டும் என்று அதித்தி அடம் பிடித்தாள். சமாளித்து அழைத்து வந்தோம்.
அங்கிருந்து காக்கிநகரே மலை உச்சிக்கு சென்றோம். வழியில் ஒரு அருவி இருப்பதாக ஓட்டுநர் இறக்கி விட்டார். அதுவும் ஒரு புல்வெளி. நாங்களும் 1 கிமீ நடந்திருப்போம், புல்வெளியே தொடர்ந்தது. ஆள் அரவமும் இல்லை. ஒரு சிறிய ஓடை மட்டும் இருந்தது. மேப்பை வைத்து பார்த்த போது ஒரு குளம் அருகில் இருப்பதாக காட்டியது. பின்புதான் தோன்றியது மொழி பிரச்சனை. அது ஒரு சிறிய குளம். இயற்கையாய் தோன்றி மீன்கள் குளமாக உள்ளது. அங்கு ஒரு பாம்பு சட்டை இருந்தது. அண்மையில்தான் உரித்து இருக்க வேண்டும். மகள் இப்போதுதான் பார்க்கிறாள். பிறகு காக்கிநகரா உச்சிக்கு சென்றோம். அங்கும் மலைகளின் அலைவரிசை. ஓட்டுநர் எங்கோ சென்று கொய்யா பறித்து வந்தார். சுவையான கொய்யாவை சாப்பிட்டு கொண்டே திரும்பினோம்.

மாலையில் தனது காப்பி தோட்டத்திற்கு ஒரு நடை கூட்டிச் சென்றார். காப்பி கடந்த 15 வருடங்களாகவே தினசரி வழக்கமாகவே ஆகி விட்டது. சிறு வயது முதல் அவ்வப்போது குடித்து வந்தது, ஸ்டார் பக்ஸ் காப்பிக்கு பின்பு காப்பிக்கு அடிமையாகி இன்றும் தொடர்கிறது. காலையில் சுவையான காப்பி. அதனாலேயே இதனை பற்றி அறிந்து கொள்வதும் இன்பமே.
அவர் அராபிக்கா ரோபஸ்டா செடிகளையும் அதன் பராமரிப்பு பற்றியும் கூறினார். அராபிக்கா 20 வருட செடி, ரோபஸ்டா 100 வருடங்கள் கூட இருக்கும். தோட்டத்திற்கு வருடத்தில் இருமுறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். அதுவும் பூக்கள் மலரும் சமயத்தில். அதன் உயரத்தை கட்டுப்படுத்த கிளைகளை வெட்டிக் கொண்டே வர வேண்டும், வாரம் இருமுறை. 80% சூரிய ஒளி தேவை செடிகளுக்கு, இதற்கு சுற்றியுள்ள மரத்தின் கிளைகளை கழித்துக்கொண்டே வர வேண்டும்.பராமரிப்பு அதிகம். ஏலக்காய் மிளகும் காட்டில் பயிரிடப்படுகின்றன. அதற்கு 20% வெளிச்சம் மட்டுமே போதும் என்பதால் காட்டிற்குள்ளேயே பயிரிட படுகிறது.

வனிலா(Vanilla) கொடியும் வளர்த்து வருகிறார். பயிரிட்ட புதிதில் கிலோ 25000ற்கு விற்றது. ஒரே வருடத்தில் 3 ஆயிரத்திற்கு வந்ததாம். அதன் மதிப்பை அறிந்து பலர் பயிரிட்டதே காரணம். இதே கதை டீ, கரும்பு, ஈமு என அடுக்கலாம். இது தொடரவும் செய்யும். வெண்ணிலா பீன்ஸில் இருந்து எடுக்க படுகிறது. இங்கு பலாவும் இயற்கையாகவே விளைகின்றது. இந்த வகை பலா கடின தோல் இல்லாமல் மெலிதாக உரிக்க சுலபமாக இருக்கும் என்றார். இங்கு பொரியல் குழம்பு இனிப்பு என அனைத்திலும் பலா சேர்க்கிறார்கள். நடையை முடித்து திரும்பினோம். செய்யும் தொழிலில் ஆர்வமும் நிறைவும் கொண்டவராக தோன்றினார். அறுபதுகளில் உள்ள அவர் தனது அனுபவத்தோடு புதுமையையும் அரவணைத்து வாழ்ந்து வருகிறார்.

கடைசி நாள் காலையில் மஞ்சராபாத் கோட்டைக்கு சென்றோம். பதினெட்டாம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் பிரெஞ்சு கூட்டணியில் எழுப்பியது. இதனை காட்டியது பிரெஞ்சு வடிவமைப்பாளர், நட்சத்திர வடிவத்திலும் உள்ளே சிலுவை வடிவ படிக்கிணறும் உள்ளது. திரும்பி வரும் பயணம் சரிவர திட்டமிடாதலால் பெங்களூரில் ஏற வேண்டிய ரயிலை விட்டு பஸ் பிடித்து வந்து சேர்ந்தோம்.