காடும் மலையும் புலியும் நாங்கள் செல்லும் ஊருக்கு அருகில் இருந்தால் உடனே பயணத்துக்குள் வந்து விடும். புலி இருக்க தேவை இல்லை. புலி என்ற பெயர் இருந்தால் கூட போதும். அங்கு செல்ல எல்லா மெனக்கெடல்களும் நடந்தேறி விடும். அப்படிதான் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் சென்றோம்.
பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு ஆனைமலை வழியாக டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் சென்றோம். இரண்டு கிமீ வித்தியாசத்தில் டாப் ஸ்லிப் தமிழ் நாட்டிலும், பரம்பிக்குளம் கேரளத்திலும் உள்ளது.
மலையில் ஏறும் வழி முழுதும் மூங்கில் மரங்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டன. கோடையின் தாக்கத்தால் டாப்ஸ்லிப் வரை மூங்கில்கள் காய்ந்து போயிருந்தது. பரவலாக காணப்பட்ட மற்றொரு மரம் கொன்றை, பூத்து குலுங்கி காட்டிற்கு மஞ்சள் நிறத்தை அளித்தது. பாலக்காடு வலி நெடுக கொன்றை மரங்கள். விசுவை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் கொன்றை பூக்கள் தோரணமாக தொங்கியது. எங்கும் பொன் போல் மின்னியது.

பரம்பிக்குளம் நுழைவாயிலில் இருந்து சஃபாரி வண்டிகள் காட்டுக்குள் கூட்டிச்செல்கின்றன. விடுமுறை என்பதால் டிக்கெட் வாங்க நீண்ட வரிசை. மாலை வண்டிக்கு பெயர் கொடுத்துவிட்டு டாப் ஸ்லிப்பில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றோம்.
ஆனைமலையில் வாழும் மக்கள் , மற்ற உயிரினங்கள் பற்றிய புகைபடத்தொகுப்பு இருந்தது. இன்றும் அங்கு மலைவாழ் மக்கள் பல குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குள் பிரிவினைகள் ஏற்ற தாழ்வுகள். இதில் ஒரு பிரிவினர் யானை பாகர்கள். வெளியில் வந்தவுடன் இரண்டு கும்கி யானைகளை பாகர்கள் கூட்டி வந்தனர். பார்த்து விட்டு போட்டோ எடுத்துவிட்டு பரம்பிக்குளம் சென்றோம். சில மணிநேரங்கள் நுழைவாயிலில் உலாத்திவிட்டு வண்டியில் ஏறினோம்.
சஃபாரி வண்டியில் மூன்று மணிநேர பயணம், மொத்தம் 60 கிமீ. வண்டியின் ஓட்டுநர் காட்டின் தகவல்களை சொல்லியும் விலங்குளை நிறுத்தி காண்பித்தும் கூட்டிச்செல்கிறார். அந்த நிலத்தை சேர்ந்த இளைஞர். மண்ணின் மீது அவருக்கு இருக்கும் உணர்வு மிகவும் அதிகம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் என சரளமாக பேசினார்.

தண்ணீர் தேக்கங்களும் அணைக்கட்டுகளும் உள்ளதால் பரம்பிக்குளம் பகுதி பசுமையாக இருக்கிறது. மூங்கில்கள் தழைத்து உள்ளன. இங்கு உள்ள அணைக்கட்டுகள் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டு, இரண்டு அரசுகளின் ஒப்பந்தப்படி அணைக்கட்டு தமிழக்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய மலை அணில், காட்டெருது, காட்டுப்பசு, புள்ளி மான், சம்பா மான், மயில் போன்ற விலங்குகள் நிறையவே பார்க்க முடிந்தது. கருங்குரங்குகளையும் பார்க்க முடிந்தது. இந்த சிங்கவால் குரங்குகள் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது. சிறு வயதில் இந்த குரங்கின் ரத்தம் நோயை குணப்படுத்த விற்கப்பட்டது ஞாபகம் வந்தது. காட்டில் கண்ணாடி பாட்டில்கள் பாலிதீன் குப்பைகளை பார்க்கும் போது கவலை அளிக்கிறது. ஒரு பெரிய காரில் சிறுவன் குடித்த ஜூஸ் டப்பாவை தூக்கி ரோட்டில் தூக்கி போட்டு விட்டு போனான்.

இந்தியாவின் பழமையான தேக்கு மரம் அங்குள்ளது. இது ஐநூறு வருடங்களுக்கு மேல் உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்த மரத்தை வெட்ட முற்பட்டதாகவும், அப்போது மரத்தில் இருந்து இரத்தம் வழிந்ததாகவும், அதனால் இம்மரம் பாதுகாக்க படுவதாகவும் நம்பப்படுகிறது. வழியில் பரம்பிக்குளம் மற்றும் சிறு நீர்த்தேக்கங்களில் நிறுத்தி பார்த்துவிட்டு திரும்பி அதே வழியில் பயணம். கீழே இறங்கும் போது ஒரு காட்டெருது காரை கடந்து சென்றது. சஃபாரி ஓட்டுநர் கூறியது ஞாபகம் வந்தது. இந்த மாடு ஒவ்வொன்றும் ஒரு டன் எடை இருக்கும். புலியின் முக்கிய உணவான இது, பதினைந்து நாட்கள் பசி தீர்க்கும்.

காட்டில் அதன் பிரமாண்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். உயர்ந்த மரங்கள் மேடு பள்ளங்கள் அமைதியாய் உலவும் விலங்குகள் பறவைகள் தண்ணீர் தேக்கங்கள் என எல்லாமே நம்மை நம் வாழ்வில் இருந்து கடத்திச் செல்லும். கண்களை நிரப்பி கொள்ளச் செய்யும். நூற்றாண்டுகளை தாண்டிய மரங்கள். அதற்கு தெரியும் நாம் ஓர் சிற்றுயிர் தான் என்று. மனிதனின் பெருமைகளையும் சிறுமைகளையும் நொறுக்கிப் போடும் இடம் காடு.