கோடை விடுமுறையில் ஒரு சிறு பயணமாக பாலக்காடு சென்று இருந்தோம். கோவையில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்ததுனாலும், உணவு மொழி வெயில் என எதுவும் மாற்றமில்லாமல் இருந்ததுனாலும் கேரளத்தில் இருந்த உணர்வு இல்லை.
ஒரு புகழ் பெற்ற ஜூஸ் (Sindhu Cool Bar) கடைதான் முதலில் சென்றது. கடையின் அலங்காரம் வெகுவாக கவர்ந்தது. சுவர் முழுதும் அனைத்து தெய்வங்களும் புகைப்படமாகவும் சிற்பங்களாகவும் இருந்தனர். சிவன் விஷ்ணு புத்தர் முதல் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் வரை. கூடவே பல இடங்களில் இருந்து கொண்டு வந்திருந்த நினைவுப் பொருட்களும் இமய மலையின் புகைப்படங்களும் நிறைத்திருந்தன. இவரின் தேடல் பல இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளது போலும் என நினைத்துக்கொண்டேன். கடையின் கிரேப் ஜூஸ் மிகவும் பிரபலம். கூட்ட நெரிசலில் கிரேப் ஜூஸ் சொல்லி விட்டு நின்று கொண்டிருந்தேன். அங்கு ஒரு முதியவர், கதர் குர்தா பைஜாமாவில் நீண்ட முடியுடன் அமைதியான பார்வையுடன் துரிதமாக வேலை பார்த்து கொண்டிருந்தார். நெரிசலில் எனது ஆர்டர் தாமதம் ஆகவும், வந்து கேட்டு பூர்த்தி செய்தார். ஜூஸ் குடித்தவுடன் தெரிந்தது. அவர் தேடலுக்கான விடை அந்த ஜூஸில் இருந்தது. சோற்று கணக்கின் கெத்தேல் சாஹேப் ஞாபகம் வருகிறார்.

பாலக்காடு கோட்டை நகரத்தின் நடுவில் உள்ளது. கோட்டையின் காலம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம் என்று கணிக்க படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் சுல்தான் ஆட்சியில் புதுப்பிக்க பட்டுள்ளது. மதில் சுவர் அகழி போக உள்ளே உள்ள கட்டிடங்கள் அரசாங்க உபயோகத்தில் உள்ளன.
உள்ளே படிக்கிணறு இன்றும் அழியாமல் உள்ளது. கோட்டையின் முன் பகுதியில் ஒரு பிரமாண்டமான மாமரம் உள்ளது. எப்படியும் நூறு வருடத்துக்கு மேல் இருக்கும் அதன் வயது. அதன் கிளைகள் மண்ணில் சாய்ந்து, வேரூன்றி பரந்துள்ளது.

அங்கிருந்து எழுத்தாளர் ஓ.வி.விஜயன் அவர்களது நினைவிடத்துக்கு சென்றோம். நகரில் இருந்து 16 கிமீ தூரத்தில் உள்ளது. அவரது இளமை பருவத்தில் இங்கு 21 நாட்கள் தங்கி உள்ளார்.அவரது சகோதரி இந்த இடத்தில் தங்கி, அருகில் இருந்த சிறுவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தார். சிறிய அறை. சுற்றிலும் பசுமையாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் சென்ற போது அறுவடை முடிந்து இருந்தது. அருகில் ஒரு குளம். பின்னாளில் அவர் ‘கசாக்கின் இதிகாசம்’ எழுதிய போது இந்த இடமே கதையின் காலமாக அமைந்தது. இன்று அவர் தங்கி இருந்த அறையோடு சேர்த்து அந்த வீடும், பின்புறம் இன்னொரு கட்டிடமும் அவரின் படைப்புகள் கார்ட்டூன்கள் மற்றும் அவரது புகைப்படங்களுடன் நினைவிடமாக உள்ளது.

மாலையில் மலம்புழா அணைக்கு சென்றிருந்தோம். பாம்புப் பண்ணை, அக்வாரியம், அணைக்கட்டு, பூங்கா என நகரின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இதில் ஒரு யட்சி சிலையும் உள்ளது. அறுபதுகளில் எழுப்பப்பட்டு பின்பு அதே சிற்பியால் சமீபத்தில் புதுப்பிக்க பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சின் மலையை மலம்புழா அணையில் இருந்து சிற்பி பார்த்த போது உதித்த யோசனை பல எதிர்ப்புகளுடன் இன்றும் நிற்கிறது.
மறுநாள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தோம். கோடை என்பதால் தண்ணீர் குறைவாகவே இருந்தது. மழைக்காலத்தில் இன்னும் பிரமாண்டமாக இருக்கும். அருவிக்கு அருகில் செல்ல முடிந்தது. மீன்கள் கால்களை மொய்த்து விடுகின்றன.
மாலையில் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றிருந்தோம். அங்கு பிரகாரத்துக்குள் செல்ல ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைகளில் கட்டுப்பாடு நிலவுகிறது. கோவிலில் கிடைக்கும் அமைதியை இத்தகைய கட்டுப்பாடுகள் குலைக்கிறது.