தத்துவத்தை பற்றிய அறிமுக புத்தகங்களை தேடும் போது எதேச்சையாக கண்ணில் பட்ட புத்தகம், இந்த ‘Sophie ‘s world’. ஜோஸ்டீன் கார்டர் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகம் (15+ ஆவது இருக்க வேண்டும்). வாழ்க்கையின் முக்கியமான தத்துவ கேள்விகளை அறிமுகம் செய்து, அதை கடந்த 2500 வருடங்களாக இக்கேள்விகளை ஆராய்ந்த ஐரோப்பிய தத்துவ ஞானிகளையும் கருத்துக்களையும் அறிமுகம் செய்கிறது.
“He who cannot draw on three thousand years is living from hand to mouth”
சிறு வயதில் சில கேள்விகள் இருந்ததாக ஞாபகம். நிலத்துக்கடியில் என்ன இருக்கிறது ; வானத்துக்கு மேலே ?; நாம் இறந்த பிறகு என்னவாகிறோம்; அந்த வயதிற்கேற்ற கற்பனை, பூமிக்கடியில் இன்னொரு உலகம். ஆனால் இந்த கேள்விகள் எதுவும் தொடரவில்லை. வாழக்கையின் அடுத்தடுத்த கட்டத்திற்கு ஓடினோம். இன்று இந்த புத்தகத்தை படிக்கும் போது, கேள்விகளை தவறவிட்டது தெரிகிறது. இன்றும் அக்கேள்விகளை கேட்கலாம்.
கதை இப்படி ஆரம்பிக்கிறது. சோபி 14 வயது மாணவி. அவளுக்குள் சின்ன சின்ன வியப்புகள், கேள்விகள் இருக்கிறது. அது இல்லாமல் தத்துவம் நுழைய முடியாது தானே. அவளது வீட்டுக்கு கடிதங்கள் வருகிறது. அனுப்புனர் இல்லாமல்.
யார் நீ ?
உலகம் எங்கிருந்து, எப்படி உருவானது ?
என்ற அடிப்படை கேள்விகளை கேட்கிறார். சோபியை யோசிக்க விட்டு இந்த கேள்விகளை வரலாற்றில் எப்படி பதிவாகி உள்ளது என்று ஆரம்பிக்கிறார். இந்த புத்தகம் மேற்கத்திய வரலாற்றை மட்டுமே அலசுவதால், நம் நாட்டில் மற்றும் கிழக்கில் எப்படி இந்த கேள்விகள் பார்க்க பட்டன என்று யோசிக்க வைக்கிறது.
வாழ்க்கையின் அடிப்படை தேவைகள்(உணவு, பாதுகாப்பு) பூர்த்தி ஆக வேண்டும். இல்லை என்றால் அதுவே நமது தேடலாக இருக்கும். அடிப்படைகள் கிடைத்த பின்பு, இந்த கேள்விகள் எழுகிறது. இதை எப்படி அணுகலாம். நமக்கு முன் பல்லாயிர கணக்கான வருடங்கள் மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றனர். அறிவியல், மருத்துவம், தத்துவம் போன்ற துறைகளும் 2000 வருடங்களுக்கு முன்பிருந்து இருக்கிறது. இவற்றில் இருந்து நம் அறிந்து கொண்டு நமது கருத்துக்களை உருவாக்கி கொள்ளலாம். பதில் கிடைக்கலாம், அல்லது தேடல் தொடரலாம்.
பூமி எப்படி உருவானது ? இந்த பிறப்பின் அர்த்தம் என்ன ? இறப்புக்கு பின் என்ன நடக்கும் ? நாம் எப்படி வாழ வேண்டும் ?

இந்த கேள்விகள் என்றுமே கேட்க பட்டு வந்துள்ளன. இன்றுமே பதிலில்லா கேள்விகள் தாம் இவை.
ஒரு சில கேள்விகள் மனிதனால் கண்டுபிடிக்க பட்டு விட்டன. நிலவில் யாருமில்லை. பூமியை சூரியன் சுற்றவில்லை. உலகம் தட்டையானது கிடையாது. கற்கால மனிதனுக்கோ அல்லது 2000 வருடம் முன்பு கூட இது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. அன்று இது போல பல கேள்விகள் தான் பல வித நம்பிக்கைகளை வைத்து நிரப்பப்பட்டன.
ஜோஸ்டீன் கார்டர் ஒரு அழகான உவமை சொல்கிறார். ஒரு மஜிசியன் தொப்பியில் இருந்து முயலை கொண்டு வருகிறார். அந்த முயல் உலகம் என்று வைத்துக்கொண்டால், அந்த முயலின் முடியில் ஒட்டி உள்ள ஒரு சிறு புள்ளியை விட சிறிய உயிர் தத்துவவாதி. அதன் முடியை பிடித்து மேலேறி சென்று பார்க்கும் முயற்சி தத்துவவாதிகள் செய்கிறார்கள். குழந்தைகளுக்கும் பொருந்தும். வளர வளர அன்றாடத்தில் நாம் சிக்கி கொள்கிறோம். மேழெழும்ப முடியாமல்.
மேற்கில் கி.மு 700 க்கு முன்பு வரை புராண கதைகள் மூலமே தத்துவம் உருவாகி வந்துள்ளது. நன்மைகளும் தீமைகளும் சமநிலையில் வைக்க பட்டது போன்ற சித்தரிப்புகள். தீமை அதிகரிக்கும் போது அவதார புருஷர்கள் தோன்றுகின்றனர். அவர்களுக்கு பல வித உருவங்கள், அலங்காரங்கள், மிருக வடிவங்கள் கொடுத்து வழிபட பட்டது. நம் புராணங்களும் இதைத்தானே சொல்கிறது. காலம் காலமாக வாய் வழியே உருவாகி வந்த புராணங்கள். தெய்வங்கள். நம்பிக்கைகள். எழுத்து வருவதற்கு முன்பு உருவாக்க பட்டவை. பாட்டுக்களாக மனனம் செய்ய கூடியதாக, வாழ்க்கையின் நெறிமுறைகளை கொண்டதாக இருந்துள்ளது.
கி.மு. 600 க்கு பிறகு, புராணங்கள் ஆராயப்பட்டுள்ளன. கேள்விகள் எழுப்ப பட்டன. மாற்று சிந்தனைகள் உருவாக ஆரம்பித்துள்ளன. புராணங்கள் மனிதர்களின் கருத்துக்கள் என்ற புரிதல் வர ஆரம்பித்தன. இதே சமயத்தில் கிரேக்கர்கள் பல நாடுகளை வென்று பல்லாயிர மக்களை அடிமைகளாக நாட்டிற்கு கொண்டு வந்தனர். நகரங்கள் எழுப்பினர். கலாச்சாரம், தத்துவம் பிற அறிவு துறைகள் வளர நேரமும் செல்வமும் அந்நாட்டில் இருப்பது அவசியம். உடல் உழைப்புக்கு அடிமைகள் இருக்க கிரேக்கர்கள் பல துறைகளில் முன் நகர ஆரம்பித்தனர். பழைய கருத்துக்களில் கேள்விகள் எழுப்பி புதிய கருத்துக்கள் உருவாக ஆரம்பித்தன.
இங்கு புராணங்கள், நம்பிக்கைகளில் இருந்து தத்துவம் பிரிந்து வருகிறது. தத்துவம் மனித அறிவின் எல்லைக்கு உள்ளே கொண்டுவரப்படுகிறது. மனிதனின் புலன்களுக்கும் அறிவுக்கும் புலப்படும் விஷயங்கள் எப்படி செயல்படுகின்றன ? தண்ணீரில் இருந்து மீன் எப்படி உருவாகிறது? மண்ணில் இருந்து செடியும் மலரும் ? எப்படி ஒன்றில் இருந்து இன்னொன்று உருவாகிறது ? ஏதாவது ஒரு பொதுவான விஷயம் இருக்குமா ?
இங்கே கண்ணுக்கு புலப்படும் இயற்கையை ஆராய்ந்து, எப்படி ஒன்று இன்னொன்றாக மாறுகிறது. மூலப்பொருட்கள் ஒன்றா ? இந்த மாற்றத்தின் அடிப்படை அணுக்கள் ஒன்றா ? இல்லை வேறுவேறா? இந்த மாற்றங்கள் நிலையானதா ? புலன்கள் மூலம் நாம் உணரும் போது, இதை நம்பலாமா ? ஆன்மா என ஒன்றுள்ளதா ? அதன் எல்லை என்ன ?
நான் என்பது புலன்கள் மூலம் சேர்க்கப்பட்ட நினைவுகளா ? அந்நினைவுகள் இருந்து உருவாக்கி கொண்டவை தான் கருத்துக்களும் கற்பனைகளுமா ? அதை தாண்டி ‘நான்’ என்பதொன்றில்லையா ? அப்படி இருக்கும் பட்சத்தில் அது உடலுடன் அழிந்து பிரிந்து உருமாறி விடுமா ? இல்லை அது அழிவில்லாததா ?
இதில் கடவுள் எங்கே வருகிறார் ? உயிரின் உலகின் படைப்பாகவா, அணுவாகவா, ஆன்மாவாகவா ?
இதில் இருந்து மனிதன் சமூகமாக எப்படி வாழ வேண்டும் என்பது கற்பிக்க பட்டு கொண்டே வந்துள்ளது. யார் இதை வகுக்கிறார்கள், அதன் உள்நோக்கு என்ன, அதில் பயன் யாருக்கு அதிகம் – தனிமனிதனுக்கா இல்லை அதிகாரத்துக்கா ?
இதன் பதில்கள் காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப, அந்நாட்டின் அரசியல், வரலாறு மற்றும் வளத்திற்கு ஏற்ப சொல்லப்பட்டு கொண்டே வந்திருக்கிறது. தனிமனிதன், சமூகம், இயற்கை, கடவுள் என்ற கோணங்களில் தத்துவம் பேசப்படுகிறது. பார்மெனிட்ஸ்(Parmenides), சாக்ரடீஸ் தொடங்கி ஜீன்-பால் சார்த்ரா வரை.
இதன் ஒரு ஒரு தத்துவமும், இன்னும் தெரிந்து உணர வேண்டியவை.
படிக்க படிக்க புரிதலை கொடுத்து, முடித்தவுடன் பல கேள்விகளை விட்டு உள்ளது இந்த புத்தகம். ஆசிரியரின் நோக்கமும் அதுவாகவே இருந்திருக்க வேண்டும். 15 வயதில் இதை படிக்கும் பொருட்டு எழுதியதன் நோக்கம் புரிகிறது. இந்த கேள்விகள் தானே வாழ்க்கையை வழிநடத்த வேண்டும்.
இது ஒரு சிறிய தொடக்கம் மட்டுமே!