ரண்தம்போரில் இருந்து ஜெய்ப்பூர் ரயிலில் பயணித்தோம். அது மும்பையில் இருந்து ஹரியானா செல்லும் தொலைதூர வண்டி. எங்கள் பெட்டியில் ஒரு மும்பை குடும்பம் இரு குழந்தைகளுடனும், ராஜஸ்தான் தந்தை மகளும் பயணித்தனர். கூடவே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெரியவரும் உடன் பயணித்தார்.
பொதுவான மொழி பேசாத போதும் பேச்சு வார்த்தை சுவாரஸ்யமாக போனது. ராஜஸ்தான் தந்தை கம்பீரமாக கோட் அணிந்து துளியும் தயக்கமில்லாமல் அவரது மொழியில் பேசினார். அதுவே அதிகம் புரிய வைத்தது. மாநிலத்தில் இரண்டு இடங்களில் நிலம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். அவரது மகள்தான் பேச தயங்கினார், ஆங்கிலம் தெரிந்த போதும்.
கலகலப்பாக ஜெய்ப்பூர் வந்து இறங்கினோம். வாகனங்கள் அலை மோதியது கூட்டத்துடன் சேர்ந்து. இது ராஜ்புட்களின் நகரம். எங்கும் அதன் சின்னங்கள். இன்றும் பாதுகாக்க படுகிறது. ராஜ மாளிகைகள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள் என.மாலையில் அஜ்மீர் கோட்டை சென்றோம். அங்கு லைட் ஷோ மூலமாக அங்குள்ள கோட்டைகளின் வரலாறு சொல்லப்படுகிறது.மீனா பழங்குடிகளின் அந்த இடம் கச்சாவா அரசர்களால் கைப்பற்றப்பட்டு, கோட்டைகளை எழுப்பி நெடுங்காலம் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முகலாயர்கள் பிரிட்டிஷ் உடன் நல்லுறவு கொண்டு அவர்களிடம் இருந்து கற்றதும் பெற்றதும் நிறையவே உள்ளது. அதற்கான விலையை அறிந்து கொள்ள இன்னும் வரலாற்றுக்குள் செல்ல வேண்டும்.

ஷோ முடிந்து திரும்பி வர டுக் டுக் மட்டுமே கிடைத்தது. டுக் டுக்கில் அமர்ந்து மெதுவாக 15 கிமீ பயணம் செய்தோம், நகரத்தின் அழகை ரசித்துக்கொண்டு குளிரில் நடுங்கிக்கொண்டு. 250 ரூபாய் மட்டுமே பெற்று கொண்டார். எங்களுக்கே பொறுக்க வில்லை. இங்கு ஆட்டோ டுக் டுக் இரண்டிலுமே குறைவான ரூபாய்க்கு பயணம், சென்னையோடு ஒப்பிட்டு.
மறுநாள் காலையில் அஜ்மீர் கோட்டைக்கு சென்றோம். கோட்டை முழுதும் ஆடம்பரத்தின் அடையாளங்கள். கண்ணாடி மாளிகை, சுவர் முழுக்க விதவிதமான ஓவியங்கள். இஸ்லாமிய கட்டிட கலையும் ராஜஸ்தானிய கைவண்ணமும் ஒன்று சேர கோட்டை இன்றும் கண்ணை கவரும் வண்ணம் இருந்தது.

அங்கிருந்து மலை ஏறினால் ஜெய்கர் கோட்டை. மன்னர் ராஜா ஜெய் சிங் இங்கு உலகில் மிகப்பெரிய நகரும் பீரங்கியை கட்டியுள்ளார். இரும்பும் தொழில் நுட்பமும் ராஜாக்கள் முன்னமே கொண்டு வர முடிந்துள்ளது. மறுபக்கத்தில் நாகர்கர் கோட்டை. இங்கிருந்து ஜெய்ப்பூர் நகரமே தெரிகிறது. இம்மூன்று கோட்டைகளையும் 24 கிராமங்களையும் சுற்றி பாதுகாப்பு சுவர் அமைக்க பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்தை பார்த்து விட்டு கீழிறங்கினோம்.

ஹவா மஹால் நகரத்திற்கு மத்தியில் உள்ளது. ராணிகள் பொது நிகழ்வுகளை பார்க்க அமைக்க பட்ட ஜன்னல்கள் நிறைந்த மாளிகை. 300க்கும் மேற்பட்ட ஜன்னல்கள். வெளியில் இருந்து அதன் அழகை ரசிக்கலாம். அதன் உட்புறத்தில் இருந்து, சிறிய ஜன்னல் மூலமே ராணிகள் பார்க்க முடிந்தது என்று நினைக்கும் போது அதன் வெளி அழகு பெரிதாய் படவில்லை. அவர்களும் இதன் அழகை ரசித்து இருப்பார்களா!


அருகில் ஜந்தர் மந்தர் உள்ளது. சவாய் ஜெய் சிங் 18ஆம் நூற்றாண்டில் கட்டிய வானியல் ஆராய்ச்சியகம். இங்கு கிரகங்கள் சூரியன் சந்திரன் நிலைகளை துல்லியமாக கண்டறிய கட்டியதாக சொல்லப்படுகிறது. இங்கு நாட்டுப்புற கதைகளை பொம்மலாட்டமாக ஒரு கூட்டம் அரங்கேற்றியது. பழமையும் புதுமையும் கலந்து செல்லும் போது பலர் பயனுறுகிறார்கள்.

சிட்டி பாலஸ் அருகில் உள்ளது. சவாய் ஜெய் சிங் ஜெய்ப்பூரை தலைநகராக கொண்டு இந்த மாளிகை எழுப்பி உள்ளார். இன்றும் ராஜ பரம்பரையின் பொறுப்பில் உள்ளது. இங்கு உலகெங்கிலும் இருந்து கொண்டு வரப்பட்ட பலவிதமான ஓவியங்கள், பொருட்கள், ஆயுதங்கள் ராஜ வாரிசுகளால் சேமிக்க பட்டுள்ளது. அதில் நமது பார்வைக்கென்று பல வைக்க பட்டுள்ளன. எகிப்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மம்மி உட்பட!

கடைசியாக ராஜாக்களும் ராணிகளும் உறங்கும் இடத்திற்கு சென்று, மேல் எழுப்பி உள்ள கட்டிடங்களை பார்த்து விட்டு திரும்பினோம்.
