ரண்தம்போர் தேசிய பூங்கா

பரத்பூரில் ராஜஸ்தானின் எல்லையில் உள்ள ஊர். ஆக்ராவில் இருந்து 50 கீ.மீ தூரம். அங்கிருந்து ரயிலில் சவாய் மாதோபூர் வந்து சேர்ந்தோம். இரண்டு மணிநேர பயணம். வழி நெடுக கடுகு வயல்களே நிறைந்திருந்தன. தாளிப்பை தவிர வேறெங்கும் கடுகு பயன்படுத்திராத நம்மக்கு, இவ்வளவு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ராஜஸ்தான் தான் கடுகு உற்பத்தியில் முதலிடம் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புலியின் படங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகள் எங்கும். ரண்தம்போர் தேசிய பூங்கா தான் இங்கு முக்கிய சுற்றுலா தளம் என்பதால், ஊர் முழுக்க புலிகளின் பெயர்களும் படங்களும். இந்த ஊரில் ஓலா கிடையாது. ரயில்வே ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தவுடன் டாக்ஸி டிரைவர்கள். ஒரு டாக்ஸிக்காரர் வந்து எங்கு என்று கேட்டு 50 ரூபாய் கொடுங்கள் போதும், நான் வீட்டுக்கு போகும் வழிதான் என்று கூட்டிச்சென்றார். இரண்டு கீ.மீ தூரம். ஒரு முன்னெச்சரிக்கை உடன் மேப் பார்த்துக்கொண்டு போனோம். இறக்கி விட்டு 50 மட்டும் கொடுங்கள் போதும் என்றார். நம்ப முடியவில்லை என்றாலும், நம்பிக்கையை உருவாகும் வழியை தெரிந்து வைத்துள்ளார். ஓலா ஊபெர் இல்லாத ஊரில் இவர்கள் தான் ஒரே வழி.

மறுநாள் காலையில் ஐந்து மணிக்கு சஃபாரி பாஸ் வாங்க போக வேண்டி இருந்தது. நம் டாக்ஸிகாரர் சோனு தான் வழி. சவாய் மதோபூர் காட்டுப்பகுதி என்பதால் அதிகாலையில் கடும் குளிர். அந்த குளிரில் டிக்கெட் வாங்கும் கும்பலுக்குள் புகுந்து சோனு பாஸ் வாங்கி தந்தார். திரும்பி ஹோட்டலுக்கு வந்து சஃபாரி வண்டிக்கு காத்திருந்தோம்.

எழுபதுகளில் இந்த இடத்தில் உள்ள காடு தேசிய பூங்காவாக மாற்றப்பட்டு அங்குள்ள புலிகள் பாதுகாக்க படுகின்றன. இது மூன்று லட்சத்திற்கும் மேல் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதி. முப்பதுக்கும் மேற்பட்ட வங்காள புலிகள் வாழ்வதாக சொல்கின்றனர். ரண்தம்போர் கோட்டையை சுற்றியுள்ள காடு என்பதனால், அதே பெயருடன் விளங்குகிறது.   

இங்கு நம்மை காட்டுக்குள் அழைத்து சென்று புலியை அதன் இடத்தில் காட்டுகிறார்கள். காடு பத்து ஜோன்களாக (Zones) பிரிக்கப்பட்டு, ஜோன்வாரியாக பதிவு செய்ய வேண்டும்.  இதற்கு முன்பதிவு ஆறு மாதத்திற்கு முன்பே செய்தால் தான், புலிகள் அதிகம் நடமாடும் ஜோன் (Zone 1,2,3) கிடைக்கும். மற்ற ஜோன்களில் புலிகள் அதிகம் தென்படுவதில்லை. ஜிப்சி மற்றும் கேன்டர் வண்டிகளில் ஒன்றை புக் செய்து கொள்ளலாம். இந்த விபரீத ஆசை ஏன் மனிதனுக்கு வருகிறது! ஆனால் நிறைய பேருக்கு இருப்பதனால் தான் இங்கு கூட்டம் அலை மோதுகிறது.

நாங்கள் பெரிய கேன்டர் வண்டியில் ஆறரை மணிக்கு ஏறி அமர்ந்தோம். மூடாக்கு இல்லாத வண்டி என்பதால், ஏறிய சில நிமிடங்களில் குளிர் உறைய வைத்தது. மூன்று மணி நேர உலா காட்டுக்குள். பதிவு செய்த மற்றவர்களையும் அவரவர் இடத்தில் ஏற்றிக்கொண்டு காடு நோக்கி சென்றோம். காட்டுக்குள் போக ஆரம்பித்ததும் குளிர் இன்னும் அதிகம் ஆக, புலிகளை பார்க்கும் ஆவலும் அதிகம் ஆயிற்று.

ஒவ்வொரு வண்டிக்கும் ஒரு வன அதிகாரி வருகிறார். அவர் புலிகளின் காலடி தடங்களை வைத்து ஆணா பெண் புலியா, எங்கிருந்து எங்கு சென்றுள்ளது வரை கூறுகிறார். மற்ற பூங்காக்களில் உள்ளது போல் இங்கு பாதுகாப்பு வளையம் எதுவும் இல்லை. உள்ளே நுழையும் இடத்தில் மட்டும் பெரிய கதவும், வன பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளனர். அதன் பின்னர் நம்முடன் இருக்கும் அதிகாரியை நம்பியே செல்ல வேண்டும்.

நாங்கள் உள்ளே செல்ல செல்ல மான்கள், மயில்கள், காட்டு பன்றி, பல வித பறவைகள் தென்பட்டன. காடு என்றாலே பச்சை பசேல் உயர்ந்த அடர்ந்த மரங்கள் என படங்களில் பார்த்து பழகி விட்டு, இதுதான் காடு என்று இந்த இடத்தினுள் செல்ல கொஞ்ச நேரம் பிடித்தன. இருபுறமும் பெயர் தெரியாத காய்ந்த மரங்கள் (குளிர் காலம் என்பதனால்), பெரிய பெரிய ஆலமரங்கள், அத்தி மரங்கள், பாக்கு மரங்கள் போன்ற நீண்ட இலை கொண்ட மரங்கள். ஓயாது கூவும் குயில்கள், பெயர் தெரியாத பறவைகளின் சத்தங்கள், கரடு முரடான பாதை என காடு எங்களை உள்வாங்கியது.

இன்னும் சூரியன் மேலெழும்ப வில்லை. குளிரில் டைப் அடித்து கொண்டே சென்றோம். பாதி தூரத்திற்கு மேல் சென்ற பிறகு மெதுவாக எட்டி பார்த்தான் சூரியன். புலியை பார்த்ததை விட மகிழ்ச்சி. அந்த பனியில் சூரிய கதிர்கள் மரங்களின் சந்துக்களில் பாயும் போது, கனவு போல் தோன்றியது. வண்டியில் எல்லோரும் போனை எடுத்து ஒரு ஷாட். கேமரா இன்னும் அக்காட்சியை தத்ரூபம் ஆக்குகிறது. நினைவில் இருப்பது கேமரா ஷாட்ஆ அல்லது கண் பார்த்ததா என்று தெரியாத அளவுக்கு. இன்னும் புலியை பார்க்க வில்லை. பல வித மான்கள் உலவுகிறது. புள்ளி மான்கள், சாம்பார் மான்கள், நீலகை மான்கள் என. நடுவில் வனத்துறையில் வேலை செய்பவர்களும், பழங்குடி மக்களும் சாதாரணமாக தென்படுகிறார்கள். அங்குள்ள விலங்குகளும் வண்டியையோ மனிதர்களையோ கண்டு கொண்டது போல் தெரியவில்லை.

ஜோன் கடைசி வரை சென்று வேண்டிய நிறுத்தி சிறிது நேரம் இடைவெளி விட்டு திரும்பினோம். புலிகளை பார்க்க முடியவில்லை. உள்ளூர சந்தோசப்பட்டு (நான் மட்டும்) கொண்டு காட்டை சுற்றி வந்து இறங்கிக்கொண்டோம். அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று.

சிறிது ஓய்விற்கு பின் சோனு ரண்தம்போர் கோட்டைக்கு கூட்டிச்சென்றார். கோட்டை காட்டிற்கு நடுவில் உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பல ராஜ குடிகள் இங்கு ஆட்சி செய்துள்ளன. அக்பர்  ராஜ்புட் அரசர்கள் உட்பட. கோட்டைக்குள் பல சமய கோவில்கள் உள்ளன. அக்பர் அனைத்து மதங்களையும் ஆதரித்தார் என்பது வரலாறு. இங்கும் அதனை காணலாம். பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பராமரிப்பின்மையா அல்லது ஆக்கிரமிப்பின் போதா என்று தெரியவில்லை.

ராஜ்புட் அரசர்களின் புலி வேட்டை தலமாக இருந்திருக்கிறது ரண்தம்போர். கோட்டையில் இருந்து காட்டின் ஏரியை (Padam Talao) பார்க்கலாம். காட்டின் பிரமாண்டத்தையும் தான். பல பறவைகள் இங்கு மனிதர்களோடு சகஜமாக உள்ளது.

திரும்பும் வழியில் சோனு புலியை பார்க்கும் வாய்ப்புள்ளது என்று மெதுவாக சென்றார். அந்தி மாலை வெளிச்சத்தில் காட்டையும், ஓடையில் தண்ணீர் குடித்து கொண்டிருந்த சாம்பார் மானையும் பார்த்த படி திரும்பினோம்.

ஊர் முழுக்க புலியின் படங்கள், அதன் பெயர்களில் தான் முக்கால் வாசி கடைகளும் விடுதிகளும் உள்ளன. நேரில் பார்க்காமலேயே நினைவுகளை நிறைத்து கொண்டது புலி.

மறுநாள் காலையில் சோனு எங்களை ரயிலில் வழியனுப்பி வைத்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s