ஆக்ராவில் ஒரு நாள்

ஒரு வார பயணமாக ஆக்ரா, ரண்தம்போர், ஜெய்ப்பூர் சென்றிருந்தோம். இதுவே வட இந்தியாவிற்கு முதல் பயணம். டெல்லி சென்று அங்கிருந்து ரயிலில் ஆக்ரா செல்வதாக திட்டம். ஜனதிரள்களுக்கு நடுவில் ஊடுருவி ரயிலில் வந்தமர்ந்தோம். தொலை தூரப்பயணம் செல்வதற்கு முன்னுள்ள ஒரு வித எதிர்பார்ப்பு கலந்த பதட்டம் வீட்டை விட்டு கிளம்பியதும் காணாமல் போய் விடுகிறது. வடஇந்திய பிம்பமும் அப்படித்தான். ரயில் ஏறியதும், மொழி தெறியாத போதும் அகன்று விடுகிறது.

ரயில் கிளம்பியதும் சிறிது தூரம் போனால் பசுமை விரியும் என்று எதிர்பார்த்திருந்தோம். சிறு சிறு வீடுகள், சிறு வயல்கள், சிறிய கிராமங்கள் என மாறி மாறி வந்தன. பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெளிப்பூச்சு அடிக்கப்படாமல், செங்கல் சுவராக காட்சி அளித்தது. ஓரிரு மரங்கள் மட்டுமே கொண்ட வயல்கள். தென்னை மரங்களுக்கு நடுவில் வயல்களை பார்த்து பழகிவிட்ட கண்களுக்கு, வெறுமையாக தோன்றியது. நடுநடுவே மஞ்சள் நிற பூக்களை கொண்ட கடுகு வயல்கள். முடிக்கப்படாத வீடுகள், தோய்ந்து போன மக்கள், அவர்களை விட களைப்புற்ற மாடுகள் என நேர்மாறாக இருந்த ரயில் பயணத்துக்கு ஒரே ஆறுதல் கடுகு வயல்கள் மட்டுமே.

ஆக்ரா வந்து இறங்கி ஓலா புக் செய்வதற்குள், ரிக்ஸாகாரர்களும் டாக்ஸி ஓட்டுநர்களும் மிரட்டாத குறையாக துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஓலா பிடித்து ஏறி அமர்ந்து ஹோட்டலுக்கு போனோம். தூய்மையை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருந்தமையால், பெரிய அலுப்பு ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால் நகரின் பழமை முகத்தில் அடித்தது. பழைய வீடுகள், பாழடைந்த கடைகள், பழைய வண்டிகள், புழுதி படிந்த ரோடுகள் என அனைத்திலும் ஒரு பழமை. குளிருக்கு கோட் அணிவதால் இருண்ட நிறத்தில் ஆடை அணிந்த மக்கள். சிறிது நாட்கள் இங்கிருந்தால் நாமும் பழசாகி விடுவோம் என்பது போல் இருந்தது.

ஆக்ரா கோட்டை

முதலில் ஆக்ரா கோட்டைக்கு  சென்றோம். இணையத்தில் ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்ததால் விரைவில் உள்ளே செல்ல முடிந்தது. கோட்டைக்கு பெரிய வரலாறு உள்ளது. முகலாயர் காலத்தில் புதுப்பிக்க பட்டு ஹுமாயுன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான், அவுரங்கஸிப் இங்கு ஆட்சி புரிந்து உள்ளனர். கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் இன்றும் ராணுவ உபயோகத்திற்கு இருப்பதால் மீதம் மட்டுமே பார்வைக்கு. அதுவே இரண்டு சதுர கி.மீ மேல் இருக்கும்.

ஷாஜகான் சிறைபடுத்தப்பட்ட அறை

உள்ளே மாட மாளிகைகள் ராஜ வாரிசுகளுக்கும், அலுவலக அறைகளும் நிறைந்திருந்தன. ஷாஜஹான் தனக்கென்று ஒரு படுக்கை அறையை தாஜ் மஹாலை பார்த்தபடி கட்டி உள்ளார்.  ஏற்றுமதி செய்யப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களும், பல வித இரத்தின கற்களும் கொண்டு கட்டப்பட்டுள்ளன. தாஜ் மஹால், இந்த மாளிகை என நிறுத்தாமல் தனக்கென்று ஒரு கருப்பு தாஜ் மஹாலும் கட்ட அரம்பித்துளார் ஷாஜஹான். அதற்கு பெல்ஜியத்தில் இருந்து கற்கள் இறக்குமதி செய்வதாக திட்டம். இதெல்லாம் தாளாது அவுரங்கசீப் தனது தந்தையை அவருடை படுக்கை அறையிலே பல ஆண்டுகள் சிறை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பளிங்கு மாளிகையில் இருந்து யமுனா நதிக்கரையில் உறங்கும் தன் மனைவியின் கல்லறையை பார்க்க  இவ்வளவு கலைநயத்துடன் கட்டிய ஷாஜஹான், வருடக்கணக்காக அதை மட்டுமே பார்க்க வேண்டி இருந்தது போல.

இரத்தின கற்கள் வேலைப்பாடு
கோட்டையில் இருந்து தாஜ்மகால்

அங்கிருந்து அக்பர் சமாதியை பார்க்க சென்றோம். நகரில் இருந்து 10 கீ.மீ தொலைவில் உள்ளது சிக்கந்த்ரா. தனது முதுமை காலத்துக்கு வேண்டி கட்டிய மாளிகையாக கூறப்படுகிறது. ஆனால் கட்ட ஆரம்பித்தசில வருடங்களிலியே இறந்ததனால் அவரது மகன் ஜஹாங்கிர் இம்மாளிகையை கட்டி, அக்பரது நினைவிடமாக உருவாக்குகிறார். அக்பரது வாரிசுகளில் பலரது சமாதி இங்குள்ளது. 400 ஆண்டுகளுக்கு முந்தய நுண்ணிய விவரங்கள் பலவாறாக திரிக்க பட்டு இருப்பினும், பொருந்தி பார்க்க கூடிய விஷயங்களை நம்புகிறோம். டூர் கைய்டு சொல்லும் விவரங்களும் அப்படிதான். பக்கத்தில் அதே இடத்தை வேறு ஒரு வாரிசின் கல்லறை என்று இன்னொரு கைய்டு சொல்லிக்கொண்டிருந்தார்.

அக்பர் நினைவிடம்

இங்கு நுழைவு வாயில் பல மதங்களின் சின்னங்களை கொண்டு, நாற்புறமும் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கான கற்கள், ஃபதேபூர் சிக்ரியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கும் இரத்தின கற்கள் வேலைப்பாடு. உட்சுவர்களில் படங்களுக்கு தங்க பூச்சு இருந்ததாகவும் ஆக்கிரமிப்பின் போது சுரண்ட பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள சுவர்களில் எதிர் ஒலி எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கும்படி கட்டிடம் வடிமைக்க பட்டுள்ளது. அரேபிய வல்லுநர்களால் வடிவமைக்க பட்ட இந்த கல்லறை தாஜ் மஹாலுக்கு முன் மாதிரியாக கூறப்படுகிறது.

அடுத்த நாள் அதிகாலையில் தாஜ் மஹால் பார்க்க சென்றோம். பனிமூட்டத்துடன் இருந்தது. பாதுகாப்பு சோதனைகளை முடித்து வாயிற்பகுதிக்கு வர, பனி விலகி இருந்தது. பல வருடங்களாக படங்களில் பார்த்து இருந்தும், நேரில் பார்க்கும் போது ஒரு ஆர்ச்சர்யம் இருக்கத்தான் செய்கிறது. தத்ரூப வடிவமாக நிற்கிறது.

22 வருடங்கள் 20000 பேர் கொண்டு கட்டப்பட்டதாக சொல்லப் படுகிறது. முழுவதும் வெள்ளை பளிங்கு கற்களில் இரத்தின கற்கள் ஒட்டி நுணுக்கமான வேலைப்பாடு கொண்டுள்ளது. 22 வருடங்கள், என்ன ஒரு கனவு, எவ்வளவு உழைப்பு!

சதுர வடிவம் கொண்ட தாஜ் மஹால், நாற்புரமும் ஒரே மாதிரி இருக்கிறது. ஒவ்வொரு சிறிய வேலைப்பாடும் மிகுந்த நுணுக்கத்தோடு செய்து இருக்கிறார்கள். நாற்புறம் வெளிப்பகுதி சுவர் முழுவதும் இரத்தின கற்கள்  பதித்து மலர் வேலைப்பாடுகளும் குரான் வரிகளும் பொறிக்க பட்டுள்ளன.

தாஜ் மஹால் அருகில் இன்றும் பல குடும்பங்கள் இதே தொழிலாக கொண்டு பொருட்கள் செய்து வருகிறார்கள். அங்கு, ஒரு சிறிய இரத்தின கல்லை எப்படி பளிங்கில் பதிப்பதற்கு செதுக்கி ஒட்ட வேண்டும் என்று செய்து காட்டினார். அதை முழு தாஜ் மஹாலோடு பொருத்தி பார்க்க மலைப்பாக இருந்தது. இருபது ஆண்டுகள் தேவைப்பட்டுதான் இருக்கும், இருபதாயிரம் பேரோடு. இந்த வேலைப்பாடு முழு நிலவொளியில் பொற்கட்டிடமாக மின்னும் அழகை பார்க்க வேண்டும். அடுத்த முறைக்கு.

சிம்மெட்ரி (Symmetry) இஸ்லாமிய கட்டிடக்கலையில் பெரும் பங்கு வகிக்கிறது. இங்குள்ள தாஜ் மஹால், அக்பர் சமாதி இரண்டுமே பெர்பெக்ட் சிம்மெட்ரிக்கல் கட்டிடங்கள். மும்தாஜ் கல்லறை சரியாக கட்டிடத்தின் நடுவில் உள்ளது. ஷாஜஹான் கல்லறை அதற்கு அருகில் உள்ளது. ஷாஜஹான் கருப்பு தாஜ் மஹாலை கட்ட ஆரம்பித்தவுடன் மகனால் சிறைபிடிக்க பட்டதனால், அதன் அடித்தளம் மட்டுமே உள்ளதாம். பின்புறத்தில் அகண்ட யமுனா நதி ஓடுகிறது. இரண்டையும்  பார்க்க போவதற்குள் பனி முழுவதுமாக மூடி விட்டது. பனி விலக இரண்டு அல்லது மூணு மணி நேரம் ஆகும் என்பதனால், அடுத்த முறைக்கு பாக்கி வைத்து விட்டு புதிய பழமைக்கு திரும்பினோம்.

அங்கிருந்து பரத்பூர் செல்லும் வழியில், ஃபதேபூர் சிக்ரியில் நிறுத்தினோம். இங்குள்ள கோட்டை முகலாயர்களின் தலைநகரமாக அக்பர் காலத்தில் இருந்திருக்கிறது. அக்பர் அனைத்து மதங்களையும் ஒரு சேர பார்த்தார் என்பதற்கு இந்த மாளிகை முழுவதும் அடையாளங்கள். ஒவ்வொரு மதத்தின் தழுவல்களும் கட்டிடங்களின் வேலைப்பாடுகளில் இருக்கிறது.

கோட்டையின் ஒரு மாளிகை

அதன் பின் வண்டி பிடித்து பரத்பூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். இரு நாட்களில் பல வண்டிகள் எடுத்தோம் ஓலா மூலமாக. ஒருவர் கூட வர மறுக்கவில்லை, ஒரு ரூபாய் அதிகம் கேட்கவில்லை.  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s