சில வாரங்களுக்கு முன் பங்கேற்ற வாசிப்பு முகாம் பல கோணங்களில் சிந்திக்க தூண்டியது. படிக்கும் நூல்கள், படிக்கும் வடிவம் (சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை), மரபு இலக்கியமா அல்லது நவீனமா, தமிழா ஆங்கிலமா. பல கேள்விகள், சில தெளிவுகள். இலக்கிய வாசிப்பு ஏன் தேவை என்ற கேள்வி மற்றனைத்தையும் விட பெரியது.
நேற்று வரை வாசித்ததில் இலக்கியம் இல்லை. இலக்கியத்தை தேடி படிக்க வில்லை. கதைகள் இளவயதை கற்பனைக்குள் கொண்டு சென்றது. அந்த உலகம் அடுத்து என்ன நடக்கும் என்பதையே பிரதானமாக கொண்டது. அந்த உலகங்கள் பிரமிக்க வைத்தன. உள்ளே கொண்டு சென்றது.
பிறகு பயனுள்ளதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம். அதனை மட்டும் துரத்தியாயிற்று பல ஆண்டுகளாக. பயனுற்றது என்னவோ உண்மைதான். நேற்று பார்த்த படத்தில், அரசன் ஒருவன் அனைத்தும் இருந்தும் நிம்மதியை தேடிச் செல்கிறான். வெளியில் இருந்து பார்க்கும் போது, நிம்மதி குலைய அவனுக்கு ஏதொரு காரணமும் இல்லை. நிம்மதி இருந்தால் தான் குலைய முடியும். அதை பெரும் பாக்கியம் அற்றவர்க்கு, முதலில் அதை பெற வேண்டும். அந்த அரசனை புரிந்து கொள்ள முடிந்தது
இலக்கியம் அதை கொண்டு வர முடியுமா ? இல்லை. ஆனால் தேட வேண்டுமே. அந்த தேடுதலுக்கு இலக்கியம் துணை நிற்குமோ ? இல்லாமலும் போகலாம்.
வாசிப்பு முகாமில் இன்னொரு பார்வை கிடைத்தது. ஒரு ஆசிரியரை பயில்தல். அங்கு சொன்னது விமரிசனம் எழுதும் நோக்கில் இருந்த போதும், அது என்னவோ சிந்திக்க வைத்தது. ஒரு மாதத்திற்கு பிறகு, அசோகமித்திரனின் கதை மாந்தர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். கதையை மீறி களத்திற்குள் செல்வது போல்தான் உள்ளது.
எழுத்து மொழியை யோசிக்க வைத்தது. மனதின் ஓட்டத்திற்கு மொழி இல்லை என்ற போதும், இரு மொழிகளில் எதில் தொடர வேண்டும் என்ற கேள்வி.
அன்றாடத்தின் சலிப்பிற்க்காக இலக்கியம் இல்லை. இலக்கியம் பயிலும் போது அந்த சலுப்பு இல்லை என்பது உண்மையாயினும். வாசிப்பும் எழுத்தும் பயணமும் கேள்விகளை எழுப்பும் வரை தொடர வேண்டியது கடமை அல்லவா !