பயணங்கள் இனிதானவை. மரங்களை, நிலத்தை, பறவைகளை, மலைகளை பார்த்துக்கொண்டே செல்வது. மாறும் நிலப்பரப்பு. தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்குமே வேறுபடும். மரங்கள், பூக்கள், பறவைகள், மனிதர்கள், வீடுகள் என கண்ணுக்கு புலப்படும் அனைத்தும். கண்ணுக்கு மட்டுமல்ல, அப்படியெனில் இணையதளம் போதும், பயணம் தேவை இல்லை.
படங்களை பார்ப்பதும் படிப்பதும் பயணத்தை ஈடு செய்ய முடியாது. ஆனாலும் ஒரு நிலத்தை அதுவும் நாம் அறியா நிலத்தை பற்றி படிக்கும் போது, மனதளவில் ஒரு பயணம் மேற்கொண்டது போல்தான் உள்ளது. இப்புத்தகம் பத்து வருடங்களுக்கு முன் ஜெமோ ஆஸ்திரேலியா பயணம் சென்ற போது எழுதிய பயணக் கட்டுரைகள்.
ஆஸ்திரேலியா பெரிய அளவில் அறிமுகம் ஆகாத ஊர். புல்வெளி, கங்காரு, கிரிக்கெட் என சில விஷயங்களைத் தவிர. அந்நாட்டின் பழங்குடிகள் நம் நிலத்தை காட்டிலும் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். வரலாறு அறியும்போதெல்லாம் இன்று நாம் வாழும் வாழ்வு சிறப்பானது என்று தெரிகிறது. மக்கள் கூட்டமாக அழிக்க பட்டுள்ளனர். நிலங்களை விட்டு துரத்தப்பட்டு மோசமான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.நோய்க்கு தீர்வில்லாமல் கூட்டமாக மாண்டுள்ளனர், போரால் ஆக்கிரமிப்பால் அடிமை வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
வறண்ட நிலப்பரப்பு, மேல்மண் ஆழமில்லை. அதற்குரிய யூக்கலிப்டஸ் மரங்கள். அம்மரங்களில் வாழும் கோலா விலங்குகள். தேடலுக்கான தேவை இல்லாததால், கோலாவிடம் பரிமாண வளர்ச்சி உண்டாகவில்லை. அதனால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினம். அம்மக்களுக்கும் இதுவே பொருந்தும்.
பிரிட்டிஷ் உருவாக்கிய சமீபித்திய வரலாறு, அவர்கள் எழுப்பிய அடையாளங்கள் என இன்றைய ஆஸ்திரேலியா. மனதில் நிற்பது என்னவோ, அப்பழங்குடிகள்.
