ஏற்காடு, தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

இரண்டு நாட்கள் ஏற்காடு பயணம். முதல் நாள், இரண்டு ஆண்டுக்கு முன் சென்ற பயணத்தில் பார்த்த அதே இடங்கள் சென்றோம் (லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சேவராயன் கோவில்). கண்களில் பதிந்த காட்சிகள். பார்க்கும் முன் கண்முன்னே வந்தன.

இங்கு ஏன் தேயிலை பயிரிடப்படுவதில்லை என்று தெரியவில்லை, அதிகமாக காபி தோட்டங்களை பார்க்க முடிகிறது. அதுவும் இப்பொது பூக்கும் பருவம். முதல் முறை காபி பூக்களை பாக்கிறோம். செடி நெடுக பூத்திருந்தது. மல்லி போன்ற தோற்றம், மல்லிக்கு ஈடான மனமும் கூட.

இரண்டாம் நாள் போட்டிங் சென்று விட்டு, கரடி குகை பார்க்க சென்றோம். குகைக்கு இப்போது அனுமதி இல்லை என்பதால் கரடியூர் வியூ பாயிண்ட் சென்றோம். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு, இதன் கடைசி 1 கிமீ சாலை தார் சாலை இல்லாமல் மண்ணும் கல்லுமாக உள்ளது. இது கூட குறைவான பயணிகள் வருவதற்கு காரணமாய் இருக்கலாம். இங்கிருந்து கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியும், மேற்கின் பள்ளத்தாக்கும் சேர்ந்து பிரமாண்ட காட்சி அளிக்கிறது.

சமீப காலமாக படித்த புத்தகங்களில் கைலாசநாதர் கோவிலை பல முறை கடந்து வந்தேன். செல்லலாம் என்று குறித்து வைத்தது. ஏற்காட்டில் இருந்து திரும்பும் போது ஓமலூர் வழியாக தாரமங்கலம் சென்றோம்.
கோவிலின் வெளிச்சுவரை பார்க்கும் போதே பழமையான கோவில் என்று உணர முடிகிறது. சுற்று சுவர் கற்களால் ஆனது. நுழைவாயில் கோபுரம் அண்மையில் கட்டியது போல் உள்ளது. கோவில் 13ஆம் நூற்றண்டில் கெட்டி முதலியார் வம்சத்தால் கட்டப்பட்டு, 17ஆம் நூற்றண்டில் அவர்களே புதுப்பித்துள்ளார்கள்.

கோவிலின் நுழைவில் இருந்து தொடங்கி பிரகாரம் முழுவதும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள். பேளூர் கோவிலில் இருப்பதை போல சிறு சிறு சிற்பங்கள், மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டு இருந்தது. சோழர் கோவிலை போல் பல்வேறு உருவ சிற்பங்களும் இருந்தன.

63 நாயன்மார்களும், ராமாயண காட்சிகளும், ரதி மன்மதன் சிற்பங்களும் இன்னும் பலநூறு சிற்பங்களும் உள்ளன. அவை அனைத்தும் என்ன சொல்ல செதுக்க பட்டுள்ளது என்றறிய ஆர்வமூட்டுகிறது. அதில் ஒன்று, ராமர் வாலியை மறைந்திருந்து பார்க்கும் காட்சி ஆனால் வாலி ராமரை பார்க்க முடியாதவாறு செதுக்கப்பட்டுள்ளன. உட்பிரகாரத்துக்கு முன் உள்ள தாமரை-அதை சுற்றி கிளிகள் அதனோடு இணைந்துள்ள கல் சங்கிலிகள், சங்கிலி கொண்டு தாமரை வட்டத்தை சுற்ற முடியும் என்றும் கூறினர். இதெல்லாம் கல்லில் செதுக்க பட்டது என்பதை யோசிக்கவே இன்னும் கற்க வேண்டும் என்று தோன்றியது. இதற்கும் மேல், வருடத்தில் 3 நாட்கள் (மாசி மாதம்) சூரிய ஒளி வெளியில் உள்ள நந்தி மேல் பட்டு கருவறையில் உள்ள சிவனின் மேல் விழுவது போல் வடிவமைக்க பட்டுள்ளது.கட்டிடக்கலை படிக்க நமது கோவில்களை விட சிறந்த இடம் வேறில்லை என்று தோன்றியது.

சில படங்கள் இங்கே : dinamalar